Tuesday, 16 August 2011

Introduction

சூஃபி போதனைப் பள்ளி, சிங்கப்பூர், 
தங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது
நக்ஷ்பந்தி, முஜத்திதி,சிஷ்த்தி,காதிரி மற்றும் ஷாதலி
ஞான வழிப்பரம்பரைகளில் இலவசப் பயிற்சித்திட்டம்.

இஸ்லாமிய ஆன்மீகம் (SUFISM)

     தஸவ்வுஃப் எனப்படும் இஸ்லாமிய ஆன்மீகத்தின் இலட்சியம், மனிதனுக்குள் சில உயர் குணப்பண்புகளை வளர்ந்தோங்கச் செய்வதாகும். அவை, சுய பரிசுத்தம், இதயப்பரிசுத்தம், அறநெறிப் பண்பாடுகள், செயல்களில் அழகிய நடைமுறைகளைக் கடைப்பிடித்தல்(இஹ்சான்), இறை நெருக்கம், உள்ளார்ந்த ஞானம்(மஃரிஃபா), சுயத்தின் அழிவு(ஃபனா), நிரந்தர இருப்பு(பகா) ஆகியனவாகும்.

   சுருங்கக்கூறுமிடத்து, இஸ்லாமிய ஆன்மீகத்தின் உண்மையான நோக்கம் யாதெனில், தேட்டவானுக்கு ஆன்மீகப் பயிற்சியளிப்பதின் மூலம், அவனை மிக உன்னத உயர்குணப்பண்புகளுடைய சிறந்த மனிதனாக உருவாக்குவதாகும்.

   மனித சரீரத்தில் 'மூளை' மட்டுமின்றி ஏனைய பிற உணர்வூட்டும் அகமிய நுட்ப மையங்கள் (Centre of Consciousness), அறிவு ஞானத்தைப் பெற்றுத்தரும் அந்தரங்கப் புலன்களாக செயல்பட்டு வருகின்றன. அவற்றுள் மிகப்பிரதானமான உணர்வு மையம் இதயமாகும். அந்த இதயத்தைப் பரிசுத்தப்படுத்தி மெருகூட்டும்போது, அது ஒளிமயமான உண்மையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக ஆகிவிடுகின்றது.

    தி ஸ்கூல் ஆஃப் சூஃபி டீச்சிங் எனப்படும் இஸ்லாமிய ஆன்மீகப் போதனைப் பள்ளியின் முதல்நிலைப் பயிற்சிகள், ஒருவருக்கு, இதயம் எனும் உணர்வு மையத்தில் துவங்கி, அனைத்து அகமிய நுட்ப மையங்களுடனான (அல்லது லதாயிஃப்களுடனான) இணைப்பை உண்டாக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஒருவரின் இதயத்தை செயல்பாட்டுக்குள்ளாகும் விதம் தூண்டும்போதும், மேலும் அதனைப் பரிசுத்தப்படுத்தி தெளிவுபெறச்செய்யும்போதும்தான், அகமிய உள்ளுணர்வு அல்லது ஞானப்பார்வை எனும் அனைத்தையும் அதன் உண்மையான வடிவத்தில் காணும் நற்பேறு கிடைக்கப்பெறுகிறது.


பள்ளி
 
   தி ஸ்கூல் ஆஃப் சூஃபி டீச்சிங் எனப்படும் இஸ்லாமிய ஆன்மீகப் போதனைப் பள்ளி, ஐந்து பிரதான ஞானவழிப்பரம்பரைகளான, நக்ஷ்பந்தி, முஜத்திதி, சிஷ்த்தி, காதிரி மற்றும் ஷாதலி ஆகிய பயிற்சிகளை இலவசமாக வழங்குவதோடு, முஜத்திதி பயிற்சிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் தருகிறது.

   இந்நிறுவனம் 1975ம் ஆண்டு, ஷைக் ஹஜ்ரத் ஆஸாத் ரஸூல் (ரஹ்) அவர்களால், தங்களின் ஆன்மீக ஆசான் ஹஜ்ரத் மவ்லவி முஹம்மது ஸயீத்கான் (ரஹ்) அவர்களின் மேலான ஒப்புதலின் பேரில் துவங்கப்பட்டது. இவ்வான்மீகக் கல்வி, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டுமென்ற உன்னதமான குறிக்கோளுடன், 55 ஆண்டுகளாக அரும்பாடுபட்டு அயராது உழைத்த ஆன்மீக ஆசான், ஹஜ்ரத் ஆசாத் ரசூல் (ரஹ்) அவர்கள், கடந்த 2006ம் ஆண்டு நவம்பர் திங்கள் 7 ம் தேதி இப்பூவுலகை விட்டும் பிரிந்தார்கள்.

    இந்நிறுவனம், தி ஸ்கூல் ஆஃப் சூஃபி டீச்சிங் என்ற பெயருடன், தற்போது,உலகின் எல்லாத் திசைகளிலும் தன் கிளைகளைப் பரப்பிய வண்ணம் செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா, கனடா, பிரேசில், ரஷ்யா,கஜகஸ்தான்,கிரிகிஸ்தான்,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,பங்களாதேஷ், பாகிஸ்தான்,துருக்கி, போலந்து,இங்கிலாந்து, இத்தாலி,ஜெர்மனி, சுவீடன்,எகிப்து,தூனிசியா,எத்தியோப்பியா,மலேசியா, சிங்கப்பூர், மற்றும் ஓமான் போன்ற உலக நாடுகளிலுள்ளோர் பலர், இதன் மாணவர்களாகத் தங்களை இணைத்துக்கொண்டிருக்கின்றனர்.

    எல்லா சூஃபி வழிமுறைகளின் பாரம்பரிய அமைப்புகளைப்போலவே, இப்பணியும் தொய்வின்றித் தொடர்கின்றது. ஹஜ்ரத் அவர்களின் புதல்வரும், கலீஃபாவெனும் பிரதிநிதியுமான ஷைக் ஹாமித் ஹஸன் அவர்கள், இவ்வான்மீகப்பாதையில் அடியெடுத்து வைக்கும் ஆர்வலர்களுக்கு, அறிமுகத்தோடு கூடிய துவக்க நிலையையும், சிறந்த வழிகாட்டுதலையும் வழங்கி, இப்பள்ளியை சீரிய முறையில் வழி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

    உண்மையான தேட்டவான்கள் யாவருக்கும், இவ்வழிமுறையின் பாடங்களைப் போதிப்பதன் மூலம், இவ்வான்மீகப்பாதையின் அளப்பெரும் பலாபலன்களும், சிறந்த நற்பேறுகளும் கிடைக்கப்பெறச் செய்வதே, இந்நிறுவனத்தின் தலையாய இலட்சியமாகும்.

    சுயப்பரிசுத்தமும் அதன் மேம்பட்ட நிலையும் அடையப்பெறுவதற்காக, பயிற்சியின் மூலம் தரப்படுகின்ற முராகபா எனும் தியானத்தையும், இறை நாமங்களை மொழிதல்களையும், முறையாக செவ்வனே தொடர்ந்து கடைபிடித்து நடக்கும்படி மாணவர்களை இந்நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

   முராகபா எனும் தியானமும், இறைநாம மொழிதல்களும், படிப்படியாக தொடர்ச்சியான அமைப்பில் திட்டமிட்டு தரப்படுவதன் மூலம், மாணவரிடத்தில் மென்மேலும் பரிசுத்தத்தன்மை ஏற்பட்டு, உலகத்துக்கும் அதன் படைப்பாளனுக்கும் இடையேயான உறவுகளைப் புதிய கோணத்தில் புரிந்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது.


   இப்பயிற்சிகள் யாவும், ஈருலக சர்தார் ஹஜ்ரத் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் 'சுன்னா' எனும் வழிமுறைகளின்படியும், நவீன காலச்சமுதாயத்துக்கு ஏற்றாற்போல்,அடுத்தடுத்து வரும் ஆன்மீக ஆசான்கள் மூலம், மிகக்கவனத்தோடு புத்தாக்கம் செய்யப்பட்டு என்றென்றும் ஏற்று நடக்கும் விதத்தில் திறம்பட அமைக்கப்பட்டுள்ளது. ஆயினும், இப்பயிற்சிகளைக் கற்றுக்கொள்ள ஆவல் கொள்ளும் எவரும், முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    இப்பள்ளியின் தனித்தன்மை வாய்ந்த சிறப்பம்சம் என்னவெனில், முற்காலத்தில் கடினமானதெனக் கருதப்பட்டு, ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் மட்டுமே போதிக்கப்பட்டு வந்த இப்பயிற்சிகள்யாவும், கிழக்கிலிருந்து மேற்கு வரைப் பரவலாகக் கொண்டு செல்லப்படும் அளவுக்கு, வரலாற்று சிறப்புமிக்க ஒரு நல்ல தருணத்தை உண்டாக்கித் தருவதேயாகும்..

நாம் வழங்கும் பயிற்சிகள் – தியானம்


   ஆன்மீக ஆசான்கள் எனும் சூஃபியாக்களின் கூற்றுப்படி, மனித மூளை மட்டுமே உணர்வூட்டும் நுட்ப மையமாக செயல்படவில்லை, ஏனெனில், அவனில், ஏனைய பிற உணர்வூட்டும் மையங்கள் காணப்படுகின்றன. அவற்றில் பிரதானமான மையம், இதயமாகும். அவ்விதயம்தான் அனைத்துப் பிரகாசங்களும் சங்கமிக்கும் மையத்தலமாகவும், சத்தியத்தை நேரடியாகப் புரிந்துகொள்ளத்தக்க சாதனமாகவும் திகழ்கிறது. இது நிகழவேண்டுமெனில், ஒரேயொரு நிபந்தனை, அதுதான், இதயத்தை விழிப்புணர்வுண்டாக்குவது.


   நமது சில்சிலாவெனும் வழிமுறையில், விசேஷமான தியானம் எனும் முராகபாவின் உதவியோடு இது பெற்றுக்கொள்ளப்படுகிறது. பிற அமைப்புகளின் தியானங்களுக்கும், நமது தியானத்திற்கும் அடிப்படையிலேயே மிகப்பெரும் வித்தியாசம் இருக்கிறது. மற்ற தியான அமைப்புகள் செய்வதைப்போல், பொளதீக சரீரத்தின் சக்திகளை ஒரு குறிப்பிட்ட புள்ளியில் ஒருமுகப்படுத்தும் முயற்சியை நாம் செய்வதில்லை. மாறாக, நமது வழிமுறையில், தியானம் என்பதின் அர்த்தமே, ஒருவரை உலக அலுவல்களிலிருந்து சிறிது நேரம் துண்டிக்கச் செய்து, ஒரு குறிப்பிட்ட நேரம், இறைவனின் பக்கமாக முழு கவனம் செலுத்திய வண்ணம், முன்னோக்கி அமரச்செய்தலாகும்.

   மாணவர் ஒருவர், முதல் நிலைப்பாடங்களான 10 பாடங்களைக் கற்றுத் தேர்ந்த பின்னர், தன் வாழ்வில் இஸ்லாமிய அனுஷ்டானங்களைக் கடைபிடிப்பதுடன், இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த 'சுன்னா' எனும் வாழ்க்கை வழிமுறைகளை மேற்கொள்வதன் மூலம், மென்மேலும் இப்பாதையில் தொடர்ந்து முன்னேற்றம் அடையலாம்.

   சில மாணவர்களுக்கு முதற்பாடத்தினை நிறைவு செய்வதற்கே வருடங்கள் உருண்டோடிவிடும், அதே நேரத்தில் சில மாணவர்கள், இப்பாதையில் அடியெடுத்து வைக்கும் தருணத்தில் அவரவர்கள் பெற்றிருக்கும் நிலையைப்பொறுத்தும், ஆழ்ந்த ஈடுபாட்டோடு தொடர்ந்து செய்து வரும் பயிற்சிகளினாலும், அதி விரைவில் இப்பாதையில் முன்னேறிச் செல்வதைக் காண முடிகிறது.

   நிய்யத் எனும் எண்ணம் கொண்ட நிலையில், இதயம் எனும் கல்பை முன்னோக்கிச் செய்யப்படும் தியானத்துடன் முதல் நிலைப் பயிற்சிகள் துவங்குகிறது. இதில் அமைதியாக சுமார் 40 முதல் 45 நிமிடங்கள் வரை அமர்ந்திருக்கும்படி சொல்லப்படுகிறது. நமது தியான முறையில், ஒரு குறிப்பிட்ட இருப்பு நிலையிலோ அல்லது அமைப்பிலோ அமர்ந்திருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. ஆனால், பொறுமை காத்து அமர்ந்திருக்கும் பட்சத்தில், தேட்டவான் மீது இறையருள் பொழியப்படுகிறது.


   இந்நிலையில் சில உடல்ரீதியான அல்லது ஆன்மீக பலாபலன்களை உடனடியாகவே அனுபவிக்க நேரலாம். சில தேட்டவான்களுக்கு, மனநிறைவு மற்றும் இலகுவான தன்மைகளின் அதிகரிப்பு, பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை, தனிப்பட்ட நுண்ணறிவு மற்றும் புரிந்துணர்வு போன்ற அனுபவங்கள், பயிற்சிகளை செய்வதின் விளைவாக ஏற்படும்.

   வாராந்திர சந்திப்பு எனும் நிகழ்வில், சிறிய குழுக்களாக மாணவர்கள் யாவரும் ஒன்று சேர்ந்து, முராகபா எனும் தியானப் பயிற்சியை மேற்கொள்ளும்போது, வெகுவிரைவாக முன்னேற்றங்கள் உண்டாகும். முராகபா எனும் தியானமும், இறை நாம மொழிதல்களும் வழக்கமாக பயிற்சி செய்து வரும் பட்சத்தில், ஒருவருக்கு, உண்மையாகவே இறைத் தொடர்பின் தொடர்ச்சியான தாக்கம் ஏற்பட உதவியாக இருக்கும்.

அணுகவும்
ஸ்கூல் ஆஃப் சூஃபி டீச்சிங், சிங்கப்பூர், நிறுவனம் பற்றிய மேலதிகத் தகவல்கள் பெறவும், தியான அமர்வுகளில் பங்கெடுக்கவும், தங்களுக்கு ஆர்வமிருந்தால், அன்பு கூர்ந்து கீழ்க்காணும் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

மின்னஞ்சல்: singaporesufischool@gmail.com
தொலைபேசி : +65-94883640


   அன்புகூர்ந்து www.sufischool.org எனும் எம் நிறுவனத்தின் பிரதான இணையதளத்திற்கு வருகை தந்து இப்பள்ளியைப் பற்றியும், இஸ்லாமிய ஆன்மீகம் பற்றியும், எமது ஞான வழிப்பரம்பரைகளின் பயிற்சிகள் பற்றியும் அறிந்து கொள்க.